ராஞ்சி : இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின், தனது கணவர் முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து உள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம், சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க ஜார்கண்ட் தலைமை செயலர், காவல் துறை டிஜிபி மற்றும் தும்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியா சுற்றுலா வந்த ஸ்பானீஷ் பெண் தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம், பாகல்பூரில் இருந்து தும்காவிற்கு நள்ளிரவில் பைக் ரெய்டு சென்று உள்ளார். நள்ளிரவு நெருங்கியதை அடுத்து ஹன்சிதா மார்க்கெட் பகுதியில் அந்த பெண் டென்ட் அடித்து தங்கி உள்ளார். இதனிடையே, அங்கு வந்த சில இளைஞர்கள் ஸ்பானீஷ் பெண்ணை, அவரது கணவர் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ஸ்பானீஷ் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னை சில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி இருந்தார். ஸ்பானீஷ் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்த போலீசார் அவர்களை தும்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராஜன் மராண்டி, பிரதீப் கிஸ்கு, சுக்லால் ஹெம்பரம் என மூன்று பேர் இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அனைவரும் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் சிஐடி போலீசார் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குற்றம் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்ததாக போலீசார் கூறினர். ஸ்பெயின் பெண் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோ கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து உள்ளது. வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.சந்திரசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து பொறுப்பு தலைமை நீதிபதி, சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் தலைமை செயலர், காவல் துறை டிஜிபி, துமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அறிக்கை அளிக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : ஸ்பானீஷ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேர் கைது! போலீசார் கூறும் முக்கியத் தகவல் என்ன?