ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஒமர் அப்துல்லா தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துடன் டெல்லி சென்று அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக ஒமர் அப்துல்லா கடந்த 16ஆம் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில் ஶ்ரீநகரில் உள்ள ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈடிவி பாரத்துக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்துக்கு அனைத்து அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 307 ஆவது சட்டப்பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேச மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெறப்படும் என்று தேசிய மாநாடு கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் இப்போது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தீர்மான நகலுடன் அடுத்த சில நாட்களில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தீர்மான நகலை வழங்க உள்ளார்.
இதையும் படிங்க : "டெல்லி போன்று காஷ்மீரை நடத்த முடியாது" புதிய அரசு எப்படி இருக்கும்? - ஒமர் அப்துல்லா பிரத்யேக பேட்டி
இதற்கு முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பு ஒமர் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் முதலமைச்சர் ஆன பிறகு முதன் முதலாக ஒமர் அப்துல்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று ஏற்கனவே கூறி வந்த நிலையில் ஒமர் அப்துல்லா பிரதமரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனிடையே கல்வியாளர் ஜாஹூர் அகமது, குர்ஷித் மாலிக் ஆகியோர் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அரசு அந்தஸ்து வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க கோரும் அமைச்சரவையின் தீர்மானம் குறித்து ஜம்மு-காஷ்மீர் எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து பேசிய மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மற்றும் எம்எல்ஏ வாகீத் பாரா,"2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதைப் போல மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிலைவேற்றப்பட்டுள்ளது. 370வது பிரிவை மீண்டும் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்தால் பிரிவு 370வது திரும்ப பெறப்படும் என்று வாக்குறுதி கொடுத்த தேசிய மாநாடு கட்சி, இப்போது வெறுமனே மாநில அந்தஸ்து கோரி மட்டும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பெரும் பின்னடைவாகும்,"என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்