டெல்லி : தலைநகர் டெல்லியை மதுபான கொள்கை முறைகேடு வழக்கு போட்டி ஆட்டி வருகிறது. முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் என இரண்டு ஏற்கனவே கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மக்களவை தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்த கைது நடவடிக்கையால் நாடே உறைந்து போய் காணப்படுகிறது. அதேநேரம், அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாகவும் அதன் காரணமாகவே அவரை அமலாக்கத்துறையை கொண்டு கைது செய்ததாகவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களிடையே ஒரு பேச்சு ஓடிக் கொண்டு இருக்கிறது.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்திய கூட்டணி கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மார்ச் 31ஆம் தேதி மெகா பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளன. இந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஒன்றாக மேடையில் தோன்ற உள்ளார் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் சுனிதா கெஜ்ரிவாலும் தனது கணவர் கைதுக்கு பின்னர் டிஜிட்டல் வழியில் இரண்டு முறை ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதன் மூலம் டெல்லி அரசியலில் சுனிதா கெஜ்ரிவாலும் விரைவில் களமிறங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தீயாய் தகவல் பரவிய வண்ணம் உள்ளது.
இதில் ராம்லீலா மைதானம் மற்றும் அண்ணா ஹசாராவின் இயக்கம் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் கட்சியின் வளர்சிக்கு முக்கிய பங்காற்றி உள்ளது என்றால் அது மிகையாகாது. ஊழலுக்கு எதிரான முழக்கத்துடன் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் 28 இடங்களை கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் ஆட்சி அதிகாரத்தை பிடித்த ஆம் ஆத்மி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை 49 நாட்களில் கவிழ்ந்தது. ஜன் லோக்பால் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற காங்கிரஸ் ஒத்துழைப்பு தராததை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு நடைபெற்றது. இதையடுத்து 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முழு பலத்துடன் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 70க்கு 67 இடங்களை கைப்பற்றி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றியது.
அன்று தொடங்கி டெல்லியில் தனது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தி வேரூன்றி காட்சி அளிக்கிறது ஆம் ஆத்மி கட்சி. இந்த தேர்தல் அனைத்திலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு பக்கபலமாக இருந்து அவரை வழிநடத்தி வந்தவர் சுனிதா கெஜ்ரிவால் எனக் கூறப்படுகிறது.
தனது அரசு வேலையை துறந்து அரசியல் பணியில் ஈடுபடப் போவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பகிர்ந்து கொண்ட போது அதற்கு இடையூறு விளைவிக்காமல் அவருக்கு பக்கபலமாக இருந்த குடும்பத்தின் பொருளாதார பொறுப்புகளை கையில் எடுத்து உள்ளார் சுனிதா கெஜ்ரிவால். இதை பல்வேறு நிகழ்வுகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் பகிர்ந்து உள்ளார்.
தற்போது டெல்லி அரசியலில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக இத்தனை நாட்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்புலமாக இருந்து பக்கபலமாக உதவி வந்த சுனிதா கெஜ்ரிவால், வரும் மக்களவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் முகமாக இருந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவார் எனக் தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Lok Sabha Election 2024: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - CPI M Candidates List