புதுடெல்லி: மணிப்பூரை சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் நரேந்திர மோடி, வன்முறையால் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலத்துக்கு வர வேண்டும் என்றும் மக்களோடு இணைந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே விரைவில் அமைதியை கொண்டு வரமுடியும் என்றும் கூறியுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்தீஸ், மலைவாழ் பழங்குடியினத்தவர்களுக்கான குகி-ஸோ குழு ஆகியவற்றுக்கு இடையே மோதல் மூண்டுள்ளது. இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் இதுவரை மணிப்பூரில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் வசிக்கின்றனர்.
போராட்டம் நடத்துவதற்கான உரிமை மறுப்பு: மணிப்பூரை சேர்ந்த 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் மேகசந்திரா, "நாங்கள் டெல்லி ஜந்தர் மந்திரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டோம். ஆனால், அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். எதிர்பாரதவிதமாக எங்களுக்கான போராட்டம் நடத்துவதற்கான உரிமைகூட மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பின்னடைவு எங்களை தடுத்து நிறுத்தாது. வெவ்வேறு வடிவங்களில் எங்களது போராட்டம் தொடரும்.
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரந்திர மோடியிடம் மனு கொடுக்க உள்ளோம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் மணிப்பூரை கடந்த 18 மாதமாக மத்திய அரசு ஏன் அலட்சியம் செய்கிறது. 60,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர். நூற்றுகணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எவ்வளவு காலத்துக்கு நாங்கள் பாதிக்கப்படப்போகின்றோம் என்று தெரியவில்லை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மணிப்பூர்: மணிப்பூர் மாநில அரசு நேரடியாக மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. மணிப்பூர் முதலமைச்சர் அதிகாரம் அற்றவராக இருக்கிறார். அறிவிக்கப்படாத குடியரசு தலைவரின் ஆட்சி நடப்பது போன்ற உணர்வை தருகிறது. மாநிலத்தின் சூழலை மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு; ஈபிஎஸ், சசிகலாவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
பிரதமர், மத்திய அரசின் அலட்சியபோக்குக்கு இது ஒரு தெளிவான உதாரணமாகும். இப்போதைய மணிப்பூர் சூழல் குறித்து பிரதமர் பேசுவதில்லை. அதுமட்டுமின்றி மணிப்பூருக்கும் வருகை தரவில்லை. மணிப்பூரின் பிரநிதிகளை அழைத்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை,"என்று கூறினார்.
ஆவலோடு காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரை சேர்ந்த பத்து அரசியல் கட்சிகளின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில்,"மணிப்பூர் மக்களின் சார்பாக, இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் என்ற முறையிலும் உங்களை (பிரதமர் மோடி) மணிப்பூர் மாநிலத்துக்கு வருமாறு அழைக்கின்றோம். கடந்த 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி முதல் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் கொந்தளிப்பாக உள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதியில் இருந்து உங்கள் வருகைக்காகவும், உதவிகள் அற்ற சூழலை முறையிடவும் மணிப்பூர் மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சம் குடும்பத்தினருடன் கூடிய ஒட்டு மொத்த மாநிலமும் இந்தகொந்தளிப்பில் நாசம் ஆகிவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விவகாரம் மாநிலம் முழுவதையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இந்த ஆண்டு நிறைவுறும் முன்பு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மணிப்பூருக்கு நீங்கள்(பிரதமர் நரேந்திர மோடி) வரவேண்டும்
ஒருவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் மணிப்பூருக்கு வர இயலாவிட்டால், மணிப்பூரை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உங்கள் அலுவலகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுகொள்கின்றோம். நீங்கள் மக்களோடு இணைந்த செயல்பாடுகளை மேற்கொண்டால்தான் மணிப்பூரில் அமைதி திரும்பும்,"என்று கூறியுள்ளனர்.