டெல்லி: மத்திய கிழக்கு நாடான குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக கேரளாவைச் சேர்ந்த 24 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். எஞ்சிய 15 பேர் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் தூத்துக்குடியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் கோவிந்தன், திண்டிவனத்தை சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பணன் ராமு, திருச்சியை சேர்ந்த ராஜூ எபநேசன், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் சடலங்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் என்ற சிறப்பு விமானம் குவைத் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்க மத்திய இணை அமைச்சர் கேவி சிங் தலைமையிலான குழு குவைத் விரைந்துள்ளது.
தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய அமைச்சர் கேவி சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் போர் விமானம் இன்று (ஜூன்.14) அதிகாலை கொச்சி நோக்கிப் புறப்பட்டது.
கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அம்மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி வந்தடையும் தமிழர்களின் உடல்களை, உடனடியாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்துக்கு என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்! - Kuwait Building Fire