லக்னோ: நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதன்படி, பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வருகிற ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். அதேநேரம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுக்கப் போவது யார் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பாஜகவின் முக்கிய எதிர்பார்ப்புகளில் இருந்த உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளின் மீதான கணிப்பு தடுமாறி உள்ளது. இங்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதிலும், சமாஜ்வாதி கட்சியின் PDA (Pichhda, Dalit, Alpsankhyak) கணக்கு பலித்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சாதியப் பின்னணியையும், அதன் அரசியல் கணக்கையும் பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர் என்ற கணக்கில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆறு இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. இதுதவிர, பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், ராஷ்ரியா லோக் தள் இரண்டு இடங்களிலும், ஆப்னா தள் மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்த்து 28 பேர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ஆவர். இதற்கு பிறகு தலித் வேட்பாளர்கள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதேநேரம், அயோத்தி ராமர் கோயில் உள்ள ஃபைசாபாத் பொது தொகுதியில் தலித் வேட்பாளரை களமிறக்கிய சமாஜ்வாதி கட்சி, அங்கு 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியையும் ருசித்தது.
அதேபோல், தனித் தொகுதி இடங்களில் ஒன்பது தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்ற நிலையில், எட்டு இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக, நகினா தனித் தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் ஆசாத் என்ற ராவான் 1,51,473 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தார்.
மற்ற சமூகத்தைப் பொறுத்தவரையில், குர்மி சமூகத்தில் 12 பேர், அகிலேஷ் யாதவ் குடும்பத்தின் யாதவ் சமூகத்தில் ஐந்து பேர், பிராமண சமூகத்தில் பத்து பேர் மற்றும் சத்ரியா சமூகத்தில் இருந்து ஒன்பது பேர் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, புமினார் சமூகத்தில் இரண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட நிஷாத் சமூகத்தில் மூன்று மற்றும் ஜாட் சமூகத்தில் நான்கு எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்" - மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!