சிம்லா: செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் குல்திப் சிங் பதானியா, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹோசியர் சிங், அஷிஷ் சர்மா மற்றும் கேஎல் தாகூர் ஆகியோரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இந்த மூன்று எம்எல்ஏக்களும் கடந்த மார்ச் 22ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மார்ச் 23ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர்.
மூன்று எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சபாநாயகர் குல்திப் சிங் பதானியா தெரிவித்தார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மூவரின் ராஜினாமா குறித்து விசாரணை நடத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இனி அவர்கள் மூவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இணைந்து மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர்.
முன்னதாக மூவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர் குல்திப் சிங் பதானியா இது தொடர்பாக மூன்று பேரும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் வழங்கினார். இதையடுத்து தங்களது ராஜினாமாவை ஏற்க உத்தரவிடக் கோடி மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க களேபரம்.. கேரளா பயணியால் அக்கப்போறு! - Air India Express Emergency Landing