ஹத்ராஸ் (உ.பி): ஹத்ராஸில் கடந்த ஜூலை 2ஆம் தேதி நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் 3,200 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் 'போலே பாபா' உரையாற்றினார். இவரின் உரையைக் கேட்க ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரும்பிச் செல்லும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரிக்க உத்தப்பிரதேச மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. விசாரணைக்குப் பின்னர் இன்று ஹத்ராஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிகழ்வை ஏற்பாடு செய்த தேவ் பிரகாஷ் மதுகார் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் உள்ளிட்ட விசாரணை முகமைகள் நிகழ்வை நடத்தியவர்கள் கூட்டத்தை தவறாக நிர்வகித்ததன் காரணமாகவே நெரிசல் நேரிட்டதாக குற்றம் சாட்டியுள்ளன. 80,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு 2.50 லட்சம் பேர் வருகை தந்திருந்தனர்.
இதையும் படிங்க: சமூகத்தின் கழுத்தை நெரிக்கும் 'நான் கடவுள்' ஆசாமிகள் - களைவது எப்படி?
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங், "நிகழ்வு நடத்துவதற்காக அனுமதி பெற்றவர்கள் உட்பட நிகழ்வுக்குப் பொறுப்பு வகித்த 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையின் நகல்கள் வரும் 4ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது," என்று கூறினார்.
போலீசார் தாக்கல் செய்துள்ள 3,200 பக்க குற்றப்பத்திரிகையில் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று நபர் கொண்ட விசாரணை ஆணையத்தையும் உ.பி. அரசு அமைத்துள்ளது.