டெல்லி: டெல்லி அரசின் 'பிங்க் டிக்கெட்' திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், கிரீன்பீஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை பெண்களின் பேருந்து பயண பாதுகாப்பு குறித்த கடுமையான கவலைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மாலை 5 மணிக்குப் பிறகு பேருந்தில் பயணிக்கும் 77 விழுக்காடு பெண்கள் பயமாக உணர்வதாக அறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரத்தில், 88 விழுக்காடு பெண்கள் 'பிங்க் டிக்கெட்' திட்டத்தின் பொதுப் பேருந்துப் போக்குவரத்தை மிகவும் பயனுள்ளதாகக் கருதுகின்றனர்.
கிரீன்பீஸ் இந்தியா அறிக்கையின்படி, டெல்லியில் 45% பெண்கள் பேருந்துகளைப் பயன்படுத்துவதில்லை; அதே நேரத்தில் 35% பெண்கள் தினமும் அல்லது வாரத்தில் 3 முதல் 5 நாள்கள் பேருந்தில் பயணிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 510 பெண்களிடம் சமூக ஊடக தளங்கள் வாயிலாகக் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.
இதன் முடிவுகள், 25 விழுக்காடு பெண்கள் இலவச கட்டணத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு பேருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதில் 23 விழுக்காடு பெண்கள் வாரத்திற்கு குறைந்தது நான்கு முறை பேருந்தில் பயணிக்கின்றனர்.
மாலை நேரப் பயணத்தைத் தவிர்க்கும் பெண்கள்:
பெண்கள் பேருந்தில் பயணிக்கும்போது பல சவால்களை எதிர்கொள்வதாக அறிக்கை கூறுகிறது. பாதிக்கும் குறைவான பெண் பேருந்து பயணிகள், பேருந்து நிறுத்தத்தை அடைவது, அங்கு காத்திருப்பது மற்றும் பேருந்தில் பயணிக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பேருந்து நிறுத்தங்களில் வெளிச்சம் போதுமானதாக இல்லை என்று கருதுகின்றனர்.
அச்ச உணர்வு காரணமாக பெண்கள் மாலை நேரப் பயணத்தைத் தவிர்க்கிறார்கள் என அறிக்கை கூறுகிறது. பேருந்துகள் கிடைக்கும் நேரம் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 87 விழுக்காடு பெண்கள் பேருந்துக்காக 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர். 13% பெண்கள் 30 நிமிடங்களுக்கும் மேல் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், பெண்கள் தங்கள் பயண நேரத்திற்கு ஏற்ப பேருந்து சேவையைப் பயன்படுத்த முடியாமல் போகிறது.
அதிகமாக மெட்ரோவைப் பயன்படுத்தும் பெண்கள்:
வருமானத்தின் அடிப்படையில் பேருந்து பயணத்தில் உள்ள வேறுபாட்டையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. குறைந்த வருமானக் குழுவில் இருக்கும் 75% பெண்கள் வாரத்திற்கு குறைந்தது 3 முதல் 5 நாள்கள் பேருந்தைப் பயன்படுத்துகின்றனர். நடுத்தர வருமானக் குழுவில் 60% பெண்கள் அடிக்கடி பேருந்தில் பயணிக்கின்றனர். அதிக வருமானக் குழுவில், அதாவது மாதம் 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் 57 விழுக்காடு பெண்கள் தினமும் பேருந்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
கிரீன்பீஸ் இந்தியாவின் அறிக்கை, 69 விழுக்காடு பெண்கள் பொதுவான பயணத்திற்காக மெட்ரோவைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. மின்சார ரிக்ஷா மற்றும் பகிர்ந்து கொள்ளும் (ஷேர்) ஆட்டோக்கள் பெண்களுக்கு மிகவும் பிரபலமான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து முறையாக அறிக்கை தெரிவிக்கிறது. டாக்சிகள் மற்றும் வாடகை கார்களை 34% பெண்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். கூடுதலாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு டெல்லி அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.