கோடா : மத்திய பிரதேசம் மாநிலம் சிவ்பூரி பகுதியை சேர்ந்தவர் காவ்யா தாகத். கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தனது தாயுடன் ராஜஸ்தான் மாநிலம் கோடா சென்ற காவ்யா அங்கு உள்ள பயிற்சி மையத்தில் தங்கி மருத்துவ படிப்பதற்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காவ்யாவை சிலர் கடத்தி வைத்து 30 லட்ச ரூபாய் பணம் தருமாறு அவரது தந்தை ரகுவீருக்கு தாகத்துக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள விக்யான் நகர் காவல் நிலையத்தில் ரகுவீர் புகார் அளித்து உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ராஜஸ்தான் போலீசார், காவ்யா மற்றும் ஹர்சித் என்ற இளைஞர் ஆகியோரை மத்திய பிரதேச போலீசாரின் உதவியுடன் இந்தூரில் வைத்து கைது செய்து உள்ளனர். இருவரிடம் விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பயிற்சி மைய விடுதியில் தாய் சேர்த்து விட்டு சென்ற மூன்றாவது நாளே அங்கிருந்து காலி செய்த காவ்யா மீண்டும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் சென்று அங்குள்ள இரண்டு ஆண் நண்பர்கள் வீட்டில் தங்கி வந்து உள்ளார். அதேநேரம் ராஜாஸ்தான் கோடாவில் விடுதியில் தங்கி மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி வருவது போன்று தன் பெற்றோருக்கு புகைப்படம் உள்ளிட்டவைகளை அனுப்பி காவ்யா ஏமாற்றி வந்து உள்ளார்.
இந்நிலையில், தன்னால் நுழைத் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர முடியாது என உணர்ந்த காவ்யா, ரஷ்யா சென்று அங்கு மருத்துவம் பயின்று மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டு உள்ளார். இதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதால் தன் ஆண் நண்பர்களுடன் காவ்யா நூதன திட்டம் தீட்டி உள்ளார்.
தன் நண்பர்களின் ஆலோசனை மற்றும் யூடியூப் மூலம் வீடியோ பார்த்து கடத்தல் நாடகம் நடத்த காவ்யா திட்டமிட்டு உள்ளார். அதன்படி இந்தூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்ற ஹர்சித் மற்றும் காவ்யா, அங்கிருந்தபடி தந்தை ரகுவீருக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
காவ்யா கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், இருந்த புகைப்படங்களை ரகுவீருக்கு அனுப்பி இருவரும் 30 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரகுவீர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். மேலும், மறுநாளே இருவரும் ஜெய்ப்பூரில் இருந்து இந்தூருக்கு திரும்பி உள்ளனர்.
இதனிடையே பஞ்சாப், அமிர்தசரஸ்க்கு சென்ற இருவரும் மீண்டும் 30 லட்ச ரூபாய் பணம் கேட்டு ரகுவீருக்கு மிரட்டல் விடுத்து உள்ளார். தொடர்ந்து அங்கிருந்து இந்தூர் வந்த காவ்யா மற்றும் ஹர்சித்தை போலீசார் கையும் களவுமாக பிடித்து உள்ளனர். இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரஷ்யா சென்று மருத்துவம் படிப்பதற்காக 30 லட்ச ரூபாய் பணம் பெற்றோரிடமே பெண் கடத்தல் நாடகம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு வெளியீடு - கிரிமினல் வழக்குகள் குறித்து வேட்புமனுவில் தகவல்! - Rahul Gandhi Assets List