டெல்லி : ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நில மோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது.
இறுதியில் கடந்த 20ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜன. 31) விசாரணை நடத்தினர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
ஏறத்தாழ 7 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த விசாரணையை அடுத்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டவழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.
நில மோசடி விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து ஹேமந்த் சோரனை ஒருநாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர மூத்த தலைவர் சம்பை சோரன் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கின்றனர்.
இதையும் படிங்க : ஆளுநருடன் சம்பை சோரன் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்?