ஜிரிபாம்: மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குக்கி மற்றும் மெய்தி இரு குழுக்களிடைய மோதல் நடந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு படையினர் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவ்வப்போது நடக்கும் தாக்குதல்களால் இன்னமும் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் சில கிராமங்கள் மீது ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மணிப்பூரில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தீவிரவாதிகள் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து ஒருவரைக் கொன்ற பிறகு காலையில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இறந்தவர்கள் குக்கி மற்றும் மெய்தி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று எங்களிடம் தகவல்கள் உள்ளன என்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மணிப்பூரில் கடந்த 17 மாதங்களுக்கு முன்பு வெடித்த மோதல் இன்று வரை நீடித்து வருகிறது. குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் தற்போது அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளையும் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தப்படும் கிராமங்கள் மேல் ட்ரோன்களை பறக்கவிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று (சனிக்கிழமை) மூடப்பட்டுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்திய ராக்கெட்டுகள் குறைந்தது நான்கு அடி நீளம் கொண்டவை என்றும் அதனுள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இதுபோன்ற ராக்கெட்டுகள் அதிக தூரம் பயணிக்க வெடிமருந்துகள் அளவை கையாள வேண்டும், பயங்கரவாதிகள் இந்த பயிற்சியை தாக்குதல் நடத்தாமல் இருந்த காலங்களில் மேற்கொண்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்த பாப் பாடகி செலினா கோம்ஸ்.. எதனால் தெரியுமா?