டெல்லி: ஒரு சிலர் சேர்ந்து ஒரு நபரை கத்தியால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு நபர், முஸ்லீம்களால் தாக்கப்படுவதை வீடியோவுடன் சேர்த்துள்ள ஒரு பதிவு காட்டுகிறது. இந்த பதிவின் மூலம், கூறப்பட்ட கூற்றின் உண்மைத் தன்மையை சரிபார்ப்போம்.
கூற்று: டெல்லியின் சீலம்பூர் பகுதியில் இந்து மதத்தைச் சார்ந்த நபர் ஒருவர் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட காட்சிகள்.
உண்மை: சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவானது, கடந்த மே 5ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் பகுதியில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்தின் காட்சிகள். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் நசீர் என செய்தி அறிக்கைகள் மற்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என அனைவருமே முஸ்லீம்கள் தான் என டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இதேபோல், கடந்த ஏப்.12-ம் தேதி டெல்லியின் சீலம்பூரில், காப்ரி சந்தையின் E பிளாக்கில், இதே போன்ற மற்றொரு கொலைச் சம்பவம் அரங்கேறியது. இதில் ஷாநவாஸ் என்ற நபர் பட்டப்பகலில் ஒரு சிறுவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்தில் எந்த ஒரு மதவாதக் கோணமும் இல்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவர் உட்பட அனைவருமே முஸ்லீம்கள் தான் என்றும், உயிரிழந்த நபரும் ஒரு முஸ்லீம் தான் எனவும் சீலம்பூர் SHO (Station House Officer) உறுதிப்படுத்தினார். எனவே, வைரலான வீடியோ பதிவில் கூறப்பட்ட கூற்று தவறானது.
இந்த வைரல் வீடியோ உடனான கூற்று குறித்த நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், வெளியான அந்த வீடியோ பற்றிய தகவல்களை சேகரிக்கவும், வைரலான அந்த வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களைப் (keyframes) பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை (Google reverse image search) மேற்கொண்டோம்.
இந்த கொலைச் சம்பவம் குறித்த தேடுதலில் கடந்த மே 7ஆம் தேதி ‘நியூஸ்னைன்’ வெளியிட்டிருந்த செய்தி அறிக்கை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் நசீர் (35) எனவும், அவர் மே 5ஆம் தேதி மாலை டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் நடந்த தாக்குதலில் கத்தியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த நசீர் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள பல செய்தி அறிக்கைகளை தேடி ஆய்வு செய்தோம். இந்த தேடுதலில் சில செய்தி அறிக்கைகள் கிடைத்தன. அதில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நசீர் வடகிழக்கு டெல்லியில் உள்ள சவுகான் பங்கரில் வசிப்பவர் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, நான்கு சிறுவர்களை கைது செய்ததாக காவல் துணை ஆணையர் (வடகிழக்கு) ஜாய் டிர்கி தெரிவித்தார். இந்த கொடூர தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை நசீர் மிரட்டியதால் தான் அவரை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையின் வடகிழக்கு டிசிபி ஊடகங்களிடம் பேசிய வீடியோவையும் ‘ஏஎன்ஐ’-இல் கண்டோம்.
மேலும், சம்பவம் பற்றி அறிய டெல்லி காவல்துறை இணையதளத்தில் இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை (FIR) நாங்கள் அணுகினோம். அந்த எஃப்ஐஆரில், இந்த சம்பவம் மே 5 மாலை 6:45 மணியளவில் வடகிழக்கு டெல்லியின் சௌஹான் பங்கர், ஜாஃப்ராபாத், தெரு எண் 6-இல் நடந்தது எனவும், இறந்தவரின் பெயர் நசீர் என்கிற நன்ஹே எனவும் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக ‘தி குயின்ட்’ வடகிழக்கு டெல்லி டிசிபி (DCP) ஜாய் டிர்கியை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்தச் சம்பவத்தில் எந்த மதவாதக் கோணமும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் என்றும், இறந்தவரும் ஒரு முஸ்லீம் தான் என்றும் அவர் கூறினார்.
இதேபோல், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லியின் சீலம்பூரில், காப்ரி சந்தையின் E பிளாக்கில் மற்றொரு கொலைச் சம்பவம் நடைபெற்றது. இது குறித்த செய்தி பகிரப்பட்ட சில வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்ட செய்தி அறிக்கைகளின்படி, ஷாநவாஸ் (35) எனும் நபர் பட்டப்பகலில் சிறுவர் ஒருவரால் தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு தாக்குதல் நடத்திய சிறுவர் கைது செய்யப்பட்டார். மேலும், சந்தேகத்திற்கிடமான 3 நபர்களான ரெஹான் (ஒற்றை பெயர்), சல்மான் பைசான் மற்றும் சோயிப் மஸ்தான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறுவன் உட்பட 2 நபர்களும் வளர்ந்து வரும் ரவுடிகள் எனக் கூறிய போலீசார், முகமது ஷாநவாஸை பணம் கேட்டு அவர்கள் மிரட்டியுள்ளதாகவும், பணம் தராததால் அவரை சுட்டுக் கொலை செய்ததாகவும் கூறினர். இது குறித்து சீலம்பூர் எஸ்.எச்.ஓ.வை (SHO) தொடர்பு கொண்டு கேட்ட போது, இதில் எந்த ஒரு மதவாதக் கோணமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். சிறுவர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் முஸ்லீம்கள் என்றும், இறந்தவரும் ஒரு முஸ்லீம் தான் என்றும் அவர் கூறினார்.
மொத்தத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டி டெல்லியின் ஜாஃப்ராபாத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒரு தவறான மதவாதக் கதையுடன் பகிரப்படுகிறது.
உரிமை கோரல்: 2024 லோக்சபா தேர்தலுக்கு இடையே, டெல்லியின் ஜாஃப்ராபாத்தில் நடந்த ஒரு கொலையின் வீடியோ மதவாதக் கதையுடன் பகிரப்பட்டது
உரிமை கோரியது: சமூக ஊடகப் பதிவுகள்
உண்மைச் சரிபார்ப்பு: பொய்
குறிப்பு: இந்தக் கதை முதலில் ஷக்தி கலெக்டிவவின் ஒரு பகுதியாக ஃபேக்ட்லியில் வெளியிடப்பட்டு ஈடிவி பாரத் ஊடகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Fact Check; மும்பை சிவ் சேனா ரோட் ஷோவில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டதா? உண்மை என்ன? - Pakistan Flag At Shiv Sena Roadshow