டெல்லி: இந்தியாவில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்துவதற்கான பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்நிலையில், விரைவில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, 12.3.2024 அன்று தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும், மார்ச் 8ஆம் தேதி வரை தேர்தலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், மார்ச் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் எனவும் அதன் பின்னர், மார்ச் 22-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம் இது முற்றிலும் தவறான தகவல் என்றும் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் இந்தச் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை இன்று (பிப்.24) வெளியிட்டுள்ளது.
அதில், '#LokSabhaElections2024-கான அட்டவணை குறித்து Whats app-ல் ஒரு போலிச் செய்தி பகிரப்படுகிறது. அந்தச் செய்தி தவறானது. #ECI ஆல் இதுவரை தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இவற்றுக்கு இடையே, தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மூன்று துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னைக்கு வருகை தந்தனர்.
மேலும், தேர்தல் ஆயத்தப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது. இதில், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு; கூட்டணி கட்சிகளுடன் திமுக 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை!