மும்பை : மகாராஷ்டிர அரசியலில் சரத் பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார் என தேர்தல் ஆணையம் புதிய பெயர் வழங்கி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் ராவ் பவார் ஆகிய மூன்று பெயர்களை சரத் பவார் தரப்பு பரிந்துரைத்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார் என்ற பெயரை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் கடந்த ஜூலை மாதம் இணைந்த அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவாரும், அஜித் பவாரும் உரிமை கொண்டாடினர். இரு தரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கியது. அஜித் பவாருக்கே அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவிது இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான படுகொலை என சரத்பவார் விமர்சித்து இருந்தார். மேலும், சரத் பவார் தரப்புக்கு புதிய பெயர் மற்றும் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் ராவ் பவார் ஆகிய மூன்று பெயர்களை தேர்தல் ஆணையத்திற்கு சரத் பவார் தரப்பு பரிந்துரைத்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார் என்ற பெயரை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க : உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!