பாட்னா: வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட அளவை காட்டிலும் வெயிலின் தாக்கம் நடப்பாண்டில் அதிகரித்து காணப்படுகிறது. கடும் வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தில் கடும் வெப்ப அலை காரணமாக ஏறத்தாழ 80 பேர் உயிரிழந்து இருக்கக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 300 பேர் வரை கடும் வெப்ப அலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு தரப்பில் 27 பேர் மட்டுமே கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், பெகுசராய், அர்வல், பக்சர் மற்றும் ரொஹ்டஸ் ஆகியா மாவட்டங்களில் அதிகபட்சமாக 80 பேர் வரை கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், உயிரிழந்தவர்கள் இறப்பு குறித்து உறுதி செய்யப்படாத நிலையில் வெப்ப அலையின் காரணமாகத் தான் அவர்கள் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
பாட்னா கயா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இரண்டு பேர் வெப்ப அலை காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பீகார் தலைநகர் பாட்னாவில் வெப்பம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக அவுரங்கபாத்தில் வெப்ப அலை காரணமாக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுரங்கபாத்தில் மட்டும் கடும் வெப்பம் காரணமாக 19 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 12 பேர் வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அவுரங்கபாத்தில் அதிகபட்சமாக 200 பேர் கடும் வெப்ப அலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்ப அலை வீசுவதை அடுத்து மாவட்ட வாரியாக மருத்துவமனைகள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளில் குளிர்சாதன படுக்கைகள், ஐஸ் பேக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பொது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பாட்னா, போஜ்பூர், பாகெல்பூர், பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு! உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு! - Delhi Water Crisis