புனே: மகாரஷ்டிரா மாநிலம் புனே அடுத்த விஸ்வாராம் பாக் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மது போதையில் வாகனம் ஓட்டி வந்த சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் சஞ்செய் பகிரா சால்வே என்ற நபரும் மது போதையில் வந்து போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
மதுபோதையில் இருந்த சஞ்செய் பகிரா சால்வேயிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு சரிவர பதிலளிக்காத சஞ்செய் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அவரைத் தொடர்ந்து மற்ற சில மதுபோதை ஆசாமிகளும் போலீசாருடன் சண்டையிடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய சஞ்செய் தான் மறைத்து வைத்திருந்த தண்ணீர் கேனில் இருந்த பெட்ரோலை இரண்டு போலீசார் மீது ஊற்றியுள்ளார். தொடர்ந்து லைட்டரை எடுத்து இருவரையும் எரித்துக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்டு பதறிப்போன இரண்டு போலீசாரும் லாவகமாக செயல்பட்டு சஞ்செயிடம் இருந்த லைட்டரை பிடுங்கி உயிர் பிழைத்தனர்.
தொடர்ந்து சஞ்செய் பகிரா சால்வேவை கைது செய்த போலீசார், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுபோதை ஆசாமி காவலர்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளங்கலை நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு- உண்மையான காரணம் என்ன? - NEET UG 2024 Counselling Delayed