மகாராஷ்டிரா: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஜூன்.4) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கடுமையாக முயற்சித்து வருகிறது. பாஜகவுக்கு ஆட்சியைக் கைப்பற்ற போதிய ஆதரவு இருக்கும் போதும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் அக்கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 240 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு கணிசமான தொகுதிகள் கையை விட்டு போனதே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019ஆம் அண்டு மக்களவை தேர்தலின் போது 41 இடங்களை வென்ற பாஜக கூட்டணி, தற்போதை தேர்தலில் வெறும் 17 இடங்களில் மட்டுமே வென்றி கண்டுள்ளது. இதில் பாஜக தனித்து 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 24 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தேவேண்டிர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தன்னை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறும் கட்சி மேலிடத்திற்கு தேவேந்திர பட்நாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் என்ன தோல்வியை சந்தித்தாலும் அதற்கு தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கட்சித் தலைமைக்கு தான் கோரியுள்ளதாகவும், தொடர்ந்து கட்சிக்காக முழு ஈடுபாடுடன் செயல்படவும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை அதே ஈடுபாடுடன் எதிர்கொள்ள வேண்டிய உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சில தொகுதிகளில் விவசாயிகள் பிரச்சினை முக்கியத்தக்க விஷயமாக மாறிவிட்டதாகவும், மேலும் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்ற பொய் பிரச்சாரம் சில வாக்காளர்களை பாதித்து முஸ்லிம்கள் மற்றும் மராத்தா இயக்கத்தின் நேரடி வாக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவின் காலை வாரிய இந்தி பெல்ட்! 2019 -2024 வித்தியாசம் என்ன? தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமா? - Lok Sabha Election Results 2024