டெல்லி: புதிய மதுபான கொள்கை சட்டம் தொடர்பான பண மோசடி வழக்கில் 6வது முறையாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் இன்று (பிப்.16) டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சட்ட விரோத பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கைது செய்யப்பட்டார். அதன் பின் புதிய முதலமைச்சராகச் சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டார். ஆனால், ஜார்க்கண்ட மாநில ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 5 முறை விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி 6வது முறையாகச் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு எம்.எல்.ஏக்கள் தன்னிடம் வந்து, பாஜக உறுப்பினர்கள் தங்களை தொடர்பு கொண்டு தலா 25 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறியதாகவும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஆட்சி கவிழும் என தெரிவித்ததாகவும் கூறினார்.
டெல்லியில் மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து உள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க 28 சட்டமன்ற உறுப்பினர் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் செயல்படத் தொடங்கிய காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்.. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி!