வயநாடு: கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியி்ன் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அத்தொகுதி காலியானது. இந்நிலையில், வரும் நவம்பர் 13ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதன்முதலாக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், எல்டிஎப் சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக கடந்த அக். 22 ஆம் தேதி பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினம், கல்பெட்டாவில் நடந்த ரோடு ஷோவில் சகோதரர் ராகுல் காந்தி, தாய் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருடன் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு தொகுதி மக்களிடம் வாழ்த்து பெற்றார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் அரெஸ்ட்; இந்தியாவில் பெருகும் சைபர் சாத்தான்... மக்களுக்கு பிரதமர் எச்சரிக்கை..!
இந்த நிலையில், இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வயநாடு வந்துள்ள பிரியங்கா காந்தி அங்கு இரண்டு நாட்கள் முகாமிட்டு பல்வேறு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இன்று நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கவுள்ள பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரியங்கா காந்தி, சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதியிலும், அதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு மானந்தவாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கல்பெட்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொழுதானில் நடைபெறும் மற்றொரு பொதுக்கூட்டத்துடன் இன்றைய நாளை நிறைவு செய்கிறார்.
நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு திருவம்பாடியில் நடைபெறும் கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து எங்கப்புழாவில் நடைபெறும் பொதுக்கூட்ட பிரச்சாரத்திலும் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளவுள்ளார். இந்த பிரச்சார நிகழ்ச்சிகளில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி., மற்றும் பிற முக்கிய யுடிஎஃப் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்