டெல்லி: இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கன் (Ajay Maken) தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜய் மக்கன், “இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துள்ளது. நாட்டின் பிரதான கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கட்சி வழங்கிய காசோலைகள் மதிப்பிழந்ததாக வியாழக்கிழமை அன்று வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டதாகவும்” மக்கன் தெரிவித்தார்.
மேலும், “எங்களிடம் மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் பணம் இல்லை. நீதி யாத்திரை மட்டுமின்றி, எல்லாம் பாதிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் நன்கொடையைக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இப்போது பணம் வரமால் எப்படி செலவுகளை மேற்கொள்வது?” எனத் தெரிவித்துள்ளார்.
2018 - 2019ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய 45 நாட்களுக்கு மேல் தாமதிக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கட்சி வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தை (ITAT) தொடர்பு கொண்டிருப்பதாகவும், அங்கு மேல்முறையீட்டு விசாரணை நடந்து வருவதாகவும், நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, இன்று பிற்பகல் பீகார் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நுழைய உள்ளது. மாலையில் ராகுல்காந்தி உடன் பிரியங்கா காந்தி வதோராவும் இணைவார் எனவும் மக்கன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது X வலைத்தளப் பதிவில், “மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாட்டின் மிகப்பெரிய எதிர்கட்சியான காங்கிரசின் வங்கிக் கணக்குகளை அதிகார திமிர் பிடித்த மோடி அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகம் மீதான பலத்த தாக்குதல். பாஜக சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கும் பணத்தை தேர்தலுக்கு செலவு செய்யும். ஆனால், நம்மால் திரள்நிதி (Crowdfunding) மூலம் திரட்டப்படும் பணத்தை அவர்கள் முடக்குவார்கள்.
அதனால்தான் எதிர்காலத்தில் தேர்தல் வராது எனக் கூறினேன். பல கட்சி அமைப்பைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும் நாங்கள் நீதித்துறையிடம் கோரிக்கை விடுக்கிறோம். இந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.