ராய்பூர் : சத்தீஸ்கரில் தனியார் தொழிற்சாலையின் பணியாளர் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் கேடியா டிஸ்லரி என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பணியாளர் பேருந்து ஏறத்தாழ 50 பயணிகளுடன் நேற்று இரவு பிலாய் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
இரவு 9 மணி வாக்கில் கும்ஹரி பகுதியில் சென்று கொண்டு இருந்த பேருந்து திடீரென 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏறத்தாழ 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிரை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்றா மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் பள்ளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரண்டு கிரேன்கள் கொண்டு பேருந்தை மீட்கும் முயற்சியில் மீட்பு படை மற்றும் போலீசார் ஈடுபட்டனர். கும்ஹரி சாலையில் முரும் சுரங்கம் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பேருந்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்து உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் பொது மக்கள் உயிரிழந்த தகவல் கேட்டு மிகுந்த வேதனைக்கு உள்ளானதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலன் பெற இறைவனை பிரார்த்திப்பதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்து உள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, "சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று தெரிவித்து உள்ளார்.