ராஞ்சி (ஜார்கண்ட்): ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியுடனான ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) ஆட்சியில், நிலக்கரி சுரங்க முறைகேடு, பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி அவரது இல்லத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணையின் போது ஹேமந்த் சோரன் மீண்டும் ஜனவரி 29-31 காலகட்டத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து தலைமறைவாக உள்ளதாகவும் அவரது மனைவியை முதலமைச்சராக்க உள்ளதாகவும் பாஜகவினர் விமர்சித்தனர். ஜனவரி 29ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.36 லட்சம் பணம் மற்றும் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ கார் ஒன்றினையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் ராஞ்சில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.
இதனையடுத்து ஜார்கண்ட் முதலமைச்சராக ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரும் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர், போக்குவரத்துறை அமைச்சரான சம்பாய் சோரன் பதவி ஏற்பார் எனக் கூறப்பட்டது. மேலும், முதலமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்காததால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குழையும் நிலை எற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆளுநரை சந்தித்த சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம், “புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவுக் கடிதத்தை நான் ஏற்கனவே ஆளுநரிடம் சமர்பித்துள்ளேன். அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரிடம் கேட்டிருப்பதாக” தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் ஆளுநர், சம்பாய் சோரனை பதவி ஏற்க அழைக்காமல் காலம் தாழ்த்துவதாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவரது X பக்கத்தில், “81 ஒரு உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பெரும்பான்மை ஆட்சியமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதும்.
ஆனால் 48 உறுப்பினர்களின் ஆதரவு இருந்த போதிலும் சம்பாய் சோரன் ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்தை அவமதிப்பது, பொதுமக்களின் கருத்தை மறுப்பதும் ஆகும். இந்திய ஜனநாயத்தின் சவப்பெட்டியில் மாண்புமிக்கவர்களால் ஆணி அடிக்கப்படுகிறது” என பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த பதிவில் சம்பாய் சோரன் அவருக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களுடன் வரிசையாக இடம்பெற்றிருக்கும் வீடியோவையும் பகிந்துள்ளார். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பதால், குதிரை பேரம் நடைபெறாமல் தடுப்பதற்காக ஜேஎம்எம் கட்சி அதன் ஆதரவு உறுப்பினர்களை இரண்டு விமானத்தின் மூலம் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலங்கானவிற்கு அழைத்துச் சென்று பாதுகாக்க நேற்று எற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலையால் விமானத்தில் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரனை ஆட்சியமைக்க அழைத்துள்ளதாக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் நிதின் மதன் குல்கர்னி தெரிவித்துள்ளார். சம்பாய் சோரன் பதவி ஏற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜேஷ் தாக்கூரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், “ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை ஜார்கண்ட் மாநிலத்திற்குள் நுழையும் முன் வெள்ளிக்கிழமை நன்பகலுக்குள் பதவி ஏற்க உறுதி செய்துள்ளோம். மேலும், தனது பெரும்பான்மையை நிரூபிக்க சம்பாய் சோரனுக்கு 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.