ராஞ்சி : பரபரப்பான அரசியக் சூழலுக்கு மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர ஜார்கண்ட் முதலமைச்சர் வேட்பாளர் சம்பை சோரன் இன்று (பிப். 1) மாலை 5.30 மணிக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்க உள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், நில மோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. இறுதியில் கடந்த 20ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜன. 31) விசாரணை நடத்தினர்.
ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஏறத்தாழ 7 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த விசாரணையை அடுத்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
ஹேமந்த் சோரனின் அமைச்சரவையில் போக்குவரத்து, பட்டியலின மற்றும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறையை நிர்வகித்து வந்தவர் சம்பை சோரன். இந்நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர இன்று மாலை 5.30 மணிக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை, சம்பை சோரன் நேரில் சந்திக்க உள்ளார்.
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர சம்பை சோரன் உள்பட 5 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவலை தடுக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 35 எம்.எல்.ஏக்கள், ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு தனியார் விமானம் மூலம் ராஞ்சியில் இருந்து ஐதராபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோசமான வானிலை காரணமாக எம்.எல்.ஏக்கள் இடமாற்றம் தாமதமாகி உள்ள நிலையில், மாலை 5 மணிக்குள் ஐதராபாத்திற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் ஒரு சில எம்.எல்.ஏக்கள் சம்பை சோரனுக்கு ஆதரவாக தொடர்ந்து ஜார்கண்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : "அற்புதமான பணிகளால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்" - நிர்மலா சீதாராமன்!