டெல்லி : நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து, போதிய மருத்துவர்கள் கண்காணிப்பு உள்ளிட்டவைகளை கிடைக்கப் பெறாமல் செய்து சிறையிலேயே அவரை மெல்ல கொல்ல சதித் திட்டமிடப்பட்டு உள்ளதாக சவுரவ் பரத்வாஜ் தெரிவித்து உள்ளார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போதிய மருத்துவ வசதிகள் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்து உள்ள நிலையில் அதை மறுத்து நிரிழிவு நிபுணர் கோரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திகார் சிறை டிஜி கடிதம் எழுதி உள்ளதாக சவுரவ் பரத்வாஜ் தெரிவித்து உள்ளார்.
சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின், மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கப் பெறாமல் செய்து மெல்ல அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது. டைப் 2 நீரிழிவு பாதிப்பு கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் தனக்கு இன்சுலின் மருந்து வழங்கவும் தனது குடும்ப மருத்துவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவ ஆலோசனைகள் பெறவும் அனுமதிக்கக் கோரி வலியுறுத்தினார்.
இருப்பினும் அவரது கோரிக்கைகளை சிறை நிர்வாகம் ஏற்க மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக அளவில் நீரிழிவு கொண்ட நோயாளி சரிவர மருந்துகளை எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் அவரது உடலில் பாகங்கள் படிப்படியாக செயலிழந்து போகும் என்றும் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்து உள்ளார்.
சிறையில் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பரத்வாஜ் தெரிவித்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் சிகிச்சையில் முறைகேடு செய்யப்படுவதாகவும், வழக்கமான மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சருக்கு இன்சுலின் மறுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த சிறை அதிகாரிகள், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு இன்சுலின் எடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், அது குறித்து எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்றும் கூறினர். மேலும், இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அளித்த அறிக்கையில், அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கமான நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தான மெட்போர்மின் மாத்திரையை வாய்வழியாக எடுத்துக் கொள்வதாகவும், இன்சுலின் தேவைப்படும் பட்சத்தில் எடுத்துக் கொள்ள வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : டிவி விவாதத்தில் தகராறு... பாஜக தலைவர் மீது நாற்காலி தாக்குதல்! ஒருவர் கைது! - BJP Leader Attack In TV Debate