டெல்லி: மேற்கு மாநிலம் டார்ஜிலிங் அருகே கஞ்சன்ஜங்கா விரைவு பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் விபத்துகளை தவிர்க்க பொறுத்தப்படும் கவாச் கருவி இல்லை என ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சிக்னலை கவனிக்காமல் சரக்கு ரயில் ஓட்டுநர் சென்றதே விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் கன்சன்ஜங்கா விரைவு ரயிலில் பயணித்த 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் விபத்து இடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரயில் விபத்து குறித்தும், பயணிகள் குறித்து தெரிந்து கொள்ள ரயில்வே அதிகாரிகள் சிறப்பு உதவி எண்களை வெளியிட்டுள்ளனர். அகர்தலா - சியல்டா பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மால்டா மற்றும் போல்பூர் பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டதாகவும், தொடர் மீட்பு பணிகள் மூலம் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்.
இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு மத்திய அரசு தரப்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு தலா 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், "மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ரயில் விபத்தில் உயிர்களை இழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, "மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செல்ல இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து: 15 பேர் உயிரிழப்பு; 60 பயணிகள் காயம் - கோர விபத்து நிகழ்ந்தது எப்படி? - west bengal train accident