டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பூஜா கேத்கர், பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது. தனக்கு சொந்தமான ஆடி காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன் விளக்கையும் அவர் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஏஏஸ் தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை உடல் ஊனக் குறைபாடு உள்ளவர் எனக் கூறி போலி ஆவணங்களை சமர்பிரித்ததாகவும், சட்டவிரோதமாக ஒபிசி வகுப்பு சான்றிதழை பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து பூஜா கேத்கர் குறித்து அடுக்கடுக்கான புகார்களும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில் அவரை விதர்பா பகுதியின் வாஷிம் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் அவரது பணியிட மாற்றம் தொடர்பாக புனே மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி ஆணையம் சார்பிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூஜா கேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா தலைமை செயலாளருக்கு சிவசேனா எம்பி மிலிந்த் தியோரா கோரிக்கை வைத்துள்ளார். இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது.
32 வயதான பூஜா கேத்கரின் தந்தை முன்னாள் அரசுப் பணியாளர். மேலும், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பகுஜான் சமாஜ் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கலின் போது அவர், தனக்கு ஆண்டு வருமானம் 43 லட்ச ரூபாய் மற்றும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தனது தந்தையின் வருமானத்தை மறைத்து பூஜா கேத்கர் ஓபிசி சான்றிதழ் பெற்றதாகவும், அதை சமர்பித்தே ஐஏஎஸ் பணியில் இணைந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து விசாரிக்க பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - Arvind Kejriwal bail