டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) பாடத்திட்டம் தேசிய அளவில் அமலில் உள்ளது. இது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 2023-2024 கல்வியாண்டில் பயிலும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதில் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, வினாத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் Cbse.nic.in, cbse.gov.in அல்லது cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?
- முதலில் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்னர் சிபிஎஸ்இ ரிசல்ட் 2024 (CBSE Board Result 2024) என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்
- இதனையடுத்து மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியை ஆகியவற்றை பதிவு செய்து தங்களது தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- அதே போல் மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெரிட் லிஸ்ட் இல்லை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான போட்டியை ஏற்படுத்தும் வகையில் கடந்தாண்டு மெரிட் லிஸ்ட் வெளியிடும் முறை நிறுத்தப்பட்டது. அதே போல் இந்தாண்டு மெரிட் லிஸ்ட் வெளியிடப்படாது என தெரிகிறது.
இதையும் படிங்க: அழுகிய நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு; கொலையா? தற்கொலையா? என விசாரணை..சேலம் அருகே பரபரப்பு!