ஐதராபாத்: நாடு முழுவதும் 4வது கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்க, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவை தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் மாதாவி லதா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா, இஸ்லாமிய பெண்களின் ஆதார் அட்டையை வாங்கி, அவர்களின் பர்தாக்களை விலக்கி முகத்தை காட்ட சொல்லி சரிபார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செகந்திராபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய் மாதவி லதா. அப்போது, அங்கு வாக்களிப்பதற்காக காத்திருந்த இஸ்லாமிய பெண்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தார்.
தொடர்ந்து அவர்களது ஆதார் கார்டுகளை வாங்கி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்தார். அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அருகில் இருந்த பெண் காவலர் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் தன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாதவி தேவி, "தான் ஒரு வேட்பாளர் மற்றும் சட்டப்படி வேட்பாளர் வாக்கு செலுத்த வருபவர்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்க உரிமை உண்டு என்றார். மேலும் தான் ஒரு ஆண் அல்ல என்றும் ஒரு பெண் மற்றும் மிகவும் பணிவுடன், தான் அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை கேட்டுக் கொண்டதாக தெரிவித்தர்.
மேலும், அவர்களிடம் தயவு செய்து அடையாள அட்டைகளைப் பார்த்து சரிபார்க்க முடியுமா என்று கேட்டுக் கொண்டதாகவும் வேறெந்த அசம்பாவித சூழலும் அங்கு நிகழவில்லை என்றும் யாராவது அதை ஒரு பெரிய பிரச்சினை செய்ய விரும்பினால், அவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம்" என்றும் தெரிவித்தார்.
முன்னதாக மாதவி லதா கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்த போது, மசூதி ஒன்றை நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ... ஆந்திர மாநில தேர்தல் களத்தில் தொடரும் பரபரப்பு! - MLA SLAPS VOTER IN ANDHRA