ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது, ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு மேலாளர் மீதும் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் நாடு முழுவதும் நேற்று வெளியாகி வசூல் வேட்டையைக் குவித்து வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.100 கோடி முன்பதிவு செய்து சாதனையைப் படைத்துள்ளது.
மைத்ரி மூவி தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி, நேற்று (டிச.5) வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது, முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு புஷ்பா 2 படத்தின் பிரீமியம் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்ததால், கூட்டம் அலைமோதியது. அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர்.
அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ரேவதி உயிரிழந்துவிட்டதாகவும், சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
I am so sorry to hear this. https://t.co/O7Ca6tSRyo
— Rashmika Mandanna (@iamRashmika) December 5, 2024
இதையும் படிங்க: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சி கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்; படக்குழு கூறுவது என்ன?
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீதும், திரையரங்கு உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு மேலாளர் மீதும் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில், பிஎன்எஸ் (Bharatiya Nyaya Sanhita act) சட்டப்பிரிவு 105, 118ன் கீழ் 1 மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், திரையரங்கின் உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இச்சம்பவத்திற்குக் காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மண்டல காவல்துறை ஆணையர் (DCP) அக்ஷன்ஷ் யாதவ், "புதன்கிழமை இரவு 9.45 மணிக்கு புஷ்பா 2 பட பிரீமியர் காட்சியை திரையிடச் சந்தியா தியேட்டர் உரிமையாளர் ஏற்பாடு செய்துள்ளார். அப்போது, துரதிர்ஷ்டவசமாக ஆர்டிசி கிராஸ் ரோட்டில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் வருவதாக கிடைத்த தகவலால், ரசிகர்களும் திரண்டுள்ளனர். அந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்தும் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் வந்த போது நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், திக்சுக்நகரைச் சேர்ந்த ரேவதியின் குடும்பத்தினர் சிக்கியுள்ளனர். மேலும், கூட்டத்தில் தட்டி கீழே விழுந்தபோது, ரசிகர்கள் கூட்டத்தில் மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.