அனுபூர் : மத்திய பிரதேசம் மாநிலம் அனுபூர் மாவட்டம் ஜெய்தரி பகுதியில் வேகமாக சென்ற கார் ரயில்வே கிராசிங்கை உடைத்துக் கொண்டு ஹிராகுட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. ரயிலின் மூன்று பெட்டிகள் கார் மீது பலமாக மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காரில் பயணித்த மற்றொரு பயணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சத்திஸ்கர் மாநிலம் பிலஸ்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் ரயில் விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநர் நரேந்திர வர்மா என்றும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் பரமேஷ்வர் ஷாகு, மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது. என்ன காரணத்திற்காக ரயில்வே கிராசிங்கை உடைத்துக் கொண்டு ரயில் மீது கார் மோதியது என தெரியவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்தில் ரயில் பயணிகள் யாருக்கும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சேதமடைந்த ஹிராகுட் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகளை மாற்றி மீண்டும் இயக்கத் தொடங்கியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - நெதன்யாகு ராஜினாமா செய்ய மக்கள் ஆர்ப்பாட்டம்! - Israel Protest