ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தங்கிலி மோர்க் பகுதியில் ஆன்மீக சுற்றுலா வந்தவர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியானா மாநிலம் குருசேத்ரத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதி நோக்கி சென்றுள்ளது.
சோகி சோரா பெல்ட் பகுதியில் தங்கிலி மோர்க் பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி மலை இடுக்குகளில் மோதி 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 21 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அக்னோர் மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய திருவிழாவில் பட்டாசு விபத்து: 3 பேர் பலி.. 30 பேர் படுகாயம்! - Puri Jagannath Temple Accident