மும்பை (மகாராஷ்டிரா): உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு, நாளை (ஜனவரி.22) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜனவரி 22ஆம் தேதி அன்று பொது விடுமுறை என மகாராஷ்டிரா அரசு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து, மகாரஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஷிவாங்கி அகர்வால், சத்யஜீத் சால்வே, வேதாந்த் அகர்வால் மற்றும் குஷி பாங்கியா ஆகிய நான்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுவில், “அரசு வெளிப்படையாக ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. பொதுவிடுமுறை அளிப்பது என்பதை ஆட்சியில் உள்ள கட்சி, அதன் விருப்பத்திற்கு எடுத்துக் கொள்கிறது.
ஆகவே, ஜனவரி 22ஆம் தேதி பொதுவிடுமுறை அளித்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தங்கள் மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை, இன்று (ஜன.21) நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி மற்றும் நீலா கோகலே அடங்கிய அமர்வு சிறப்பு விசாரணை நடத்தியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது. விளம்பர நோக்கம் கொண்ட வழக்காகவும் தோன்றுகிறது. இந்த பொதுநலன் வழக்குக்கு புறம்பான காரணங்களுக்காகத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு முற்றிலும் அற்பமானது, எரிச்சலூட்டுகிறது, நீதிமன்றத்தின் கவனத்தைப் பெறவும் தகுதியற்றது.
இத்தகைய வழக்குகளில் மனுதாரருக்கு நீதிமன்றம் அபராதம் விதிக்கும். ஆனால் மனுதாரர்க்ள மாணவர்கள் என்பதால், அவ்வாறு செய்யாமல் எச்சரித்து தள்ளுபடி மட்டும் செய்வதாக” அறிவித்தது. முன்னதாக, விடுமுறை அறிவிப்பது அரசின் நிர்வாகக் கொள்கை சார்ந்தது எனவும், அது நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதில்லை எனவும் மகாராஷ்டிரா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்பே, ஊடகங்களுக்கு எப்படி தெரிய வந்தது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.