டெல்லி: 18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச மாநில அரசுகளின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூன்.2) நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இரண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.2) எண்ணப்படுகின்றன. காலை முதலே வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அருணாசல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் சூழல் நிலவுகிறது.
அருணாசல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 23 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் ஏறத்தாழ 46 இடங்களை பாஜக கைப்பற்றும் என தேர்டல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தெரிய வருகிறது.
அருணாசல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றும் 14 இடங்களில் முன்னிலையும் வகிக்கிறது. இதில் மாநிலத்தில் அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைக்கிறது. இதையடுத்து இடாநகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவை தொடர்ந்து தேசிய மக்கள் கட்சி 1 இடத்தில் வெற்றி பெற்ற நிலையில் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கொன்சா தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வாங்கலம் சவின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் இரண்டு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ஐக்கிய ஜனதா தளம் 7 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி 1 இடத்திலும், இரண்டு சுயேட்ச்சைகளும் வெற்றி பெற்றனர். அருணாசல பிரதேசத்தை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
31 தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்றத்தில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றும் 13 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநில வாரியாக மக்களவை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்! வெற்றி யாருக்கு? - Lok Sabha Election 2024 Exit Polls