டெல்லி: வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர், 8 மத்திய அமைச்சர்கள் உள்பட 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதன்படி, மத்திய அமைச்சர்களான மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ், பர்சோட்டம் ரூபலா, தர்மேந்திர பிரதான், வி முரளீதரன், நாராயண் ரனே, ராஜீவ் சந்திரசேகர் மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் உள்பட 47 எம்பிக்கள் ஏப்ரல் 2 முதல் 3-க்குள் பதவிக்காலம் முடிகிறது.
இவர்கள் உடன் மன்மோகன் சிங் மற்றும் ஜெ.பி.நட்டா ஆகியோரது பதவிக்காலமும் முடிவடைகிறது. இவ்வாறு பதவிக்காலம் முடிவடையும் ராஜ்யசபா எம்பிக்களில், பாஜக - 28, காங்கிரஸ் - 11, திரிணாமூல் காங்கிரஸ் - 4, பாரத் ராஷ்டிர சமிதி - 4, பிஜு ஜனதா தள், ராஷ்டிரிய ஜனதா தள் மற்றும் ஒருங்கிணைந்த ஜனதா தள் ஆகியவற்றில் தலா 2, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவற்றில் தலா ஒரு எம்பியும் ஆவர்.
இந்த நிலையில், பாஜக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது. இதன் அடிப்படையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாயா நரோல்யா, பான்சிலால் குர்ஜார் மற்றும் உமேஷ் நாத் மஹாராஜ் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
அதேபோல், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து போட்டியிடுகிறார். இவருக்கு அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள் ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளது. அதேநேரம், பிஜு ஜனதா தள் ஆதரிப்பதை தானும் விரும்புவதாக அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். முன்னதாக, கடந்த பிப்ரவரி 11 அன்று, பாஜக தனது முதற்கட்ட மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதன்படி, தர்மசீலா குப்தா மற்றும் பீம் சிங் பீகாரில் இருந்தும், ராஜா தேவேந்திர பிரதாப் சிங் சத்தீஸ்கரில் இருந்தும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதேநேரம், சமிக் பட்டாச்சார்யா மேற்கு வங்கத்தில் இருந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும், சுபாஷ் பராலா ஹரியானாவில் இருந்தும், நாராயணா கிருஷ்ணசா பாந்தகே கர்நாடகாவில் இருந்தும் மகேந்திர பட் உத்தரகாண்டில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆர்பிஎன் சிங், சுதான்சு திரிவேதி, சவுத்ரி தேஜ்வேர் சிங், சத்னா சிங், அமர்பால் மெளரியா, சங்கிதா பாலவந்த் மற்றும் நவீன் ஜெயின் ஆகியோர் வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளனர். மேலும், தற்போதய நிலையில் பாஜக - 93, காங்கிரஸ் - 30, திரிணாமூல் காங்கிரஸ் - 13 மற்றும் ஆறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்பட 239 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலையீடே விடுதலைக்கு காரணம் - தாயகம் திரும்பிய முன்னாள் இந்திய கடற்படை வீரர்..!