டெல்லி : மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தீவிர தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் 7 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. குறிப்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி போட்டியிடும் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் பாஜக சார்பில் அபிஜித் தாஸ் பாபி களமிறக்கப்பட்டு உள்ளார்.
மற்றபடி சத்ரபதி உதயன்ராஜே போன்ஸ்லே மகாராஷ்டிராவின் சதாரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மஞ்சீத் சிங் மன்னா மியாவிந்த் பஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் களம் காணுகிறார். அனிதா சோம் பிரகாஷ் பஞ்சாபில் ஹோஷியார்பூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஐஏஎஸ் அதிகாரி பரம்பல் கவுர் சிந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டா மக்களவைத் தொகுதியில் களம் காணுகிறார். உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தாக்கூர் விஸ்வதீப் சிங் போட்டியிட உள்ளார். ஆம் ஆத்மி கட்சியும் பன்சாப்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
மக்களவை தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். மேலும் ரோடு ஷோவில் ராஜ்நாத் சிங் ஈடுபட உள்ளார். 39 மக்களவை தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தை தொடர்ந்து 21 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "உலகின் மிகப் பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம் தேர்தல் பத்திரம்... அதன் பின்னணி பிரதமர் மோடி" - ராகுல் காந்தி! - Lok Sabha Election 2024