டெல்லி: அதானி குழும முறைகேட்டில் தொடா்புடைய நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபி தலைவா் மாதபி பூரி புச், பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருந்தன.
முன்னதாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை விசாரித்த செபி அமைப்பே தற்போது முறைகேட்டில் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கை அதானி நிறுவனங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை செபி அமைத்த வல்லுநா்கள் குழு நிராகரித்தது.
ஆனால், தற்போதைய குற்றச்சாட்டுகள் செபியின் பங்களிப்பைக் காட்டுகிறது. செபி மீது நம்பிக்கை வைத்து தங்களின் வருமானத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சிறு, குறு முதலீட்டாளா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மாபெரும் மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அவசியம்.
அதுவரையில், கடந்த 70 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட தேசத்தின் அரசமைப்பு நிறுவனங்களைச் சமரசம் செய்து பிரதமா் நரேந்திர மோடி தனது நண்பரை பாதுகாப்பாா்” எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூடுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை பாஜக மறுத்து உள்ளது.
இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், இந்தியப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் ஒரு பெரிய சதியின் பின்னணியில் உள்ள ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்துடன் கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரேஸ் தொடர்பு கொண்டு உள்ளதாகவும் நீண்ட காலமாக அவர் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாகவும் அவர் கூறினார். அதேபோல், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மாள்வியா எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இப்போது வெளிப்படையாகவே இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களை எழுப்பி அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்.
நமது பொருளாதாரத்தின் மீதான நன்நம்பிக்கையை குறைத்து மதிப்பிடும் இந்த அப்பட்டமான முயற்சி ராகுல் காந்தியின் எண்ணம் என்னவென்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. அவரது எண்ணம் இந்தியாவை சிதைப்பதைத் தவிர வேறில்லை என்பது இதன் மூலம் புலப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்! டிரம்ப் - எலான் மஸ்க் நேர்காணலில் சிக்கல்! - Elon Musk Donald Trump Interview