டெல்லி: தமிழ்நாடு பாஜக செயலாளர் வினோஜ் பி செல்வத்தின் வழக்கறிஞர் ஜி பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வை, தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் இதர பொது இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு இன்று (ஜன.22) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும், இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகத்தில் உள்ள கோயில்களில் நேரலையில் ஒளிபரப்பக் கூடாது என தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோயில்களில் பூஜை செய்வதற்கோ அல்லது அயோத்தியில் நடக்கும் கும்பாபிஷேக நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்யவோ எந்த ஒரு தடையும் இல்லை என தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த திவாரி அளித்த அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.
மேலும், கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்வை ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தும், அனுமதி மறுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணங்கள் குறித்தும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம், இந்த மனுவில் ஜனவரி 29ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
மேலும், தமிழகத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு வாய்மொழியாக உத்தரவிடாமல், சட்டத்தின்படி செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம், வாய்மொழி உத்தரவை யாரும் கடைபிடிக்கக் கூடாது எனத் தெரிவித்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டமே இப்போதும் நாட்டை ஆள்கிறது. தமிழ்நாட்டிற்கும் அது பொருந்தும் என நாட்டின் உயர்ந்த நீதித்துறையில் இருந்து, தமிழக அரசுக்கு அதை வலியுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நித்தியானந்தா..? வர வாய்ப்புள்ளதா..?