மும்பை: நேற்று இரவு, மகாராஷ்டிரா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் கன்பத் கெய்க்வாட், சிவசேனா கட்சியின் (ஷிண்டே) பிரமுகர் மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகேஷ் கெய்க்வாட், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனையடுத்து, பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக, தானேயில் உள்ள உல்ஹான்ஸ்நகரில் இருக்கும் ஹில் லைன் காவல் நிலையத்தில் வைத்து, அக்காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் அனில் ஜெக்தாப் முன்னிலையில், பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் மற்றும் சிவசேனா கட்சியின் ஷிண்டே ஆதரவாளரும், கல்யாண் நகரத் தலைவருமான மகேஷ் கெய்காவாட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட், சிவசேனா பிரமுகர் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மகேஷ் கெய்க்வாட், தானேவில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த சம்பவத்தின்போது, சிவசேனா பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர் மீது 5 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்திற்கு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மீது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இது குறித்து அம்மாநில முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், தான் விரக்தி அடைந்ததால் இந்த துப்பாக்கிசூடு நடந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டினால் பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு வருத்தம் இல்லை எனவும் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர், உல்ஹாஸ்நகர் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார்!