கயா: பீகார் மாநிலம், கயா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், மாதம் ரூ.10 ஆயிரம் வருவாய் ஈட்டும் நிலையில், அவரிடம் ரூ.2 கோடி வருமான வரி செலுத்த கோரியும், நோட்டீஸைப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் ரூ. 67 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கயாவின் கோட்வாலி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நய் குடோன் மொஹல்லாவில் வசிப்பவர் ராஜீவ் குமார் வர்மா. இவர், எண்ணெய் குடோனில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரூ. 2 கோடி வருமான வரி செலுத்துமாறு வரப்பெற்ற நோட்டீஸை கண்டு ராஜீவ் குமார் வர்மா அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் பயத்தில் வேலைக்குச் செல்வதை கூட நிறுத்தினார்.
இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து ராஜீவ் குமார் வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகினார். இதையடுத்து இது தொடர்பாக மேல் முறையீடு செய்யுமாறு அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: பீகாரில் 'ஜிதியா' பண்டிகை: நீராட சென்றபோது ஆற்றில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித் துறை தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், "கடந்த 2015-16ம் நிதியாண்டில் ரூ. 2 கோடி நிரந்தர வைப்புத்தொகை கணக்கை (எஃப்டி) ராஜீவ் துவக்கினார். ஆனால், அவர் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு தான் எஃப்டி கணக்கை துவக்கியிருந்தாலும், தனக்குப் பணம் தேவைப்பட்டதால் அடுத்த ஆண்டே, அதை முன்கூட்டியே திரும்பப் பெற்றதாக ராஜீவ் கூறினார். இந்த காலகட்டத்தில் அவர் ஒரு எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு மொத்த வியாபாரியிடம் பணிபுரிந்ததாக தெரிவித்துள்ளார்.
ராஜீவ் குமார் வர்மா மேலும் கூறுகையில், "நான் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கிறேன். எனக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்து எந்த விவரமும் தெரியாது. நோட்டீஸ் வந்த பிறகுதான் வருமான வரி கணக்கு என்ற ஒன்றே தெரியும். ரூ.10 ஆயிரம் வருமானம் உள்ளவர் எப்படி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியும்?" என கேள்வியெழுப்பினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்