பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த சார்ஜாபூர் பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவன தம்பதி, கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அமேசானில் கேமிங் டிவைஸ் ஒன்றை ஆர்டர் செய்து உள்ளனர். இதையடுத்து அமேசானில் இருந்து பார்சல் டெலிவிரி செய்யப்பட்ட நிலையில், அதை தம்பதி பிரித்து பார்த்துள்ளனர்.
அப்போது பார்சலில் இருந்து திடீரென பாம்பு ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்து போன தம்பதி கத்தி கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகாமை வீடுகளை சேர்ந்தவர்களும் வந்து பார்த்து பார்சலில் இருந்து பாம்பு வெளியே வர முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பார்சலில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பில் பாம்பின் தோல் ஒட்டிக் கொண்டதால் அதில் இருந்து முழுமையாக வெளியேற முடியாமல் பாம்பு தவித்தது.
இதை வீடியோவாக பதிவு செய்த தம்பதி அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். வீடியோ வேகமாக பரவிய நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்திய பிரிவின் செய்தி தொடர்பாளர் உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். இது விவகாரம் குறித்து நிறுவனம் தரப்பில் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அமேசான் இந்தியா பிரிவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரார்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையான முன்னுரிமையாகும். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
மேலும் அவர்களுக்கான விஷயங்களை சரி செய்வதற்கு மேலேயும், அதற்கு அப்பாலும் செல்வதே எங்கள் அர்ப்பணிப்பாகும். வாடிக்கையாளர்களின் அனைத்து புகார்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்து, இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், புதன்கிழமை (ஜூன்.18) இரவு அமேசான் டெலிவிரி பிரிதிநிதியிடம் இருந்து நேரடியாக பார்சலை பெற்றுக் கொண்டதால் இது முற்றிலும் நிறுவனத்தின் கவன்க்குறைவால் நிகழ்ந்தது என்றும், பார்சலை பிரித்து பார்த்த அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் எங்களது மனநிலை எப்படி இருந்தது என்பதை விவரிக்க முடியாது, பார்சலில் இருந்த விஷத்தன்மை கொண்ட நாகப் பாம்பு தீண்டியிருந்தால் என்னவாயிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, நிறுவனத்தின் அஜாக்கிரதையால் நடந்த இந்த சம்பவத்திற்கு அவர்கள் முற்றிலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தம்பதி கூறினர்.
இதையும் படிங்க: மகளுடன் பாஜகவில் இணைந்த அரியானா காங்கிரஸ் தலைவர் கிரன் சவுத்ரி! திடீர் கட்சித் தாவலுக்கு இதுதான் காரணமா? - Kiran Choudhry joins BJP