விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன்படி, ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற அவைத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, கூட்டணி கட்சி ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநர் அப்துல் நசீரை சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யான் ஆகியோர் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதனையடுத்து, சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க ஆளுநர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், இன்று விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கெசரப்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஐடி வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா, நிதின் கட்கரி, ராம்மோகன் நாயுடு, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நந்தாமுரி பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அது மட்டுமல்லாமல், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் உள்ள 24 பேரில் மூன்று பேர் பெண்கள், புதிய முகங்கள் 17 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, சந்திரபாபு நாயுடு பதவியேற்க வந்த நேரத்தில் அங்கிருந்த தொண்டர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். தொடர்ந்து, ‘நேனு..’ என சந்திரபாபு நாயுடு பதவிப் பிரமாணம் எடுக்கத் துவங்கும் போதும் ஆர்ப்பரிப்பு அதிகரித்தது. பதவியேற்ற பிறகு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடுவை கட்டிப்பிடித்து ஆரத்தழுவினார். அப்போது, சந்திரபாபு நாயுடு கண் கலங்கிய நிலையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து, ‘நேனு கொனிடேலா பவன் கல்யாண்..’ என பதவியேற்றபோதும் அங்கிருந்த தொண்டர்களின் உற்சாகம் அவர்களது ஆர்ப்பரிப்பில் தெரிந்தது. அது மட்டுமல்லாமல், பதவியேற்று முடிந்த பிறகு, தனது அண்ணனான சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆனந்தக் கண்ணீரோடு பவன் கல்யாண் ஆசி பெற்றார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடுவை ஆரத்தழுவி கைகுலுக்கினார். மேலும், பவன் கல்யாணை கையோடு அழைத்துச் சென்று சிரஞ்சீவியைச் சந்தித்து மகிழ்ந்த மோடி, இருவரது கைகளையும் உயர்த்திக் காட்டினார். அப்போது, அரங்கமே கட்டுக்கடங்கா ஆர்ப்பரிப்பில் மூழ்கியது.
பின்னர், நடிகர் ரஜினிகாந்தை தேடிச் சென்று மோடி உரையாடினார். அப்போது, லதா ரஜினிகாந்திடமும் பிரதமர் பேசினார். அடுத்ததாக, நந்தாமுரி பாலகிருஷ்ணாவிடம் உரையாடிய மோடி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிவிட்டுச் சென்றார்.
மேலும், தன் சகோதரியும், முதலமைச்சரின் மனைவியுமான நாரா புவனேஷ்வரியை நந்தாமுரி பாலகிருஷ்ணா என்ற பாலய்யா முத்தமிட்டு வாழ்த்திச் சென்ற நிகழ்வும் மேடையில் அரங்கேறியது.
இதையும் படிங்க: மேடையில் கடுகடுத்த அமித்ஷா! தடுமாறிய தமிழிசை! என்ன நடக்கிறது பாஜகவில்?