இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 46 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பெஷாவருக்குப் புறப்பட தயாராக இருந்தது. ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்திற்குள் திடீரென குண்டு வெடித்தது. இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பொருட்கள் சிதறின. குண்டு வெடிப்பில் சிக்கிய 24 பயணிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 46 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 'பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி' என்ற பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து குவெட்டா கமிஷனர் ஹம்சா ஷஃப்காத் கூறுகையில், ''முதற்கட்ட ஆய்வின்படி இந்த குண்டு வெடிப்பு தற்கொலை படையால் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்கொலை படை தாக்குதல் நடத்த வந்த நபர் பயணியை போன்று லக்கேஜுடன் வந்தார். அது போன்ற நபரை முன்கூட்டியே அடையாளம் காண்பது கடினமானதாகும்'' என்றார்.
இதையும் படிங்க: நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெண்கள்.. உ.பி.யில் பதற வைக்கும் சம்பவம்..!
குண்டு வெடித்த ரயில் நிலையத்தை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இறந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டு குவெட்டா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள 'பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி' பலுசிஸ்தானின் வளங்களை மத்திய அரசு சுரண்டுவதாக நீண்ட காலமாக குற்றசாட்டு வைத்து வருகிறது. பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் இந்த குழு அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்புதான் பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே வெடித்த குண்டு வெடிப்பில், ஐந்து குழந்தைகள், ஒரு பெண் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ஃப்ராஸ் புக்டி, " இது அப்பாவி பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான செயல். பயங்கரவாதிகள் பொதுமக்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர் உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில், குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள், கடந்த ஆண்டுகளில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முக்கால்வாசி இறப்புகள், 2023 ஆம் ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்த இறப்புகளை விட அதிகமாகியுள்ளது. 2023 இல் 1,523 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, முதல் மூன்று காலாண்டுகளில் 1,534 ஆக உயர்ந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்