அமராவதி: நல்லாட்சியை மேம்படுத்தவும், வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கவும், வாரியம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யவும் ஆந்திர அரசு மாநில வக்ஃப் வாரியத்தை கலைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில வக்ஃப் வாரியத்துக்கு மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தும், ஏழு பேரை பரிந்துரைத்தும் கடந்த அக்டோபர் 21, 2023 இல், அப்போதைய ஆந்திர மாநில அரசு அரசானை ஒன்றை வெளியிட்டது. இந்த அரசாணையை, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தற்போதைய அரசு ரத்து செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"நல்லாட்சியைப் பேணுதல், வக்ஃப் வாரிய சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் வக்ஃப் வாரியத்தின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான நலன் கருதி, இதுதொடர்பாக முன்பு பிறப்பித்த அரசாணையை (அரசாணை எண்:47) உடனடியாக திரும்பப் பெறுகிறது" அரசு செயலர் கே.ஹர்ஷவர்தன் சனிக்கிழமை வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த அரசாணையின்படி, வாரியம் நீண்டகாலமாக செயல்படவில்லை என்று மாநில வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாரியம் நீண்டகாலமாக செயல்படவில்லை என்று அரசாங்கத்திற்கு தெரிவித்தார். அத்துடன் வாரியம் அமைக்கப்பட்டது தொடர்பாக மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணையின்போது நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளையும் வாரியத்தை கலைப்பது என்ற முடிவை எடுத்தபோது மாநில அரசு கருத்தில் கொண்டது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.