ஐதராபாத்: கட்வெல் தொகுதி பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி எம்எல்ஏ பந்தல கிருஷ்ண மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் பந்தல கிருஷ்ண மோகன் ரெட்டி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அவருக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வரவேற்பு அளித்தார். முன்னதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது ஆதரவாளர்களை சந்தித்த பந்தல கிருஷ்ண மோகன் ரெட்டி ஜூலை 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்தார்.
கிருஷ்ண மோகன் ரெட்டி முதலமைச்சர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது அமைச்சர்கள் பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணாராவ், முதலமைச்சரின் ஆலோசகர் வேம் நரேந்தர் ரெட்டி, எம்பி மல்லு ரவி, எம்எல்ஏக்கள் யென்னம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தனம் நாகேந்தர், கைரதாபாத் டிசிசி தலைவர் ரோஹின் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிருஷ்ண மோகன் ரெட்டி பிஆர்எஸ்-ல் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு அக்கட்சியின் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தலைவர்கள் எம்எல்ஏக்கள் விலகுவதை தடுக்க பிஆர்எஸ் தலைமை எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் சாதகமான பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உள்ளூர் நிலவரங்கள், தலைவர்களுக்கு இடையேயான உள்கட்சி பூசல், தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக எம்எல்ஏக்கள் தனம் நாகேந்தர், கடியம் ஸ்ரீஹரி, எம்எல்ஏ எல்லாம் வெங்கட்டராவ், போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, சஞ்சய்குமார், காலே யாதய்யா ஆகியோர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கட்வெல் எம்எல்ஏ கிருஷ்ண மோகன் ரெட்டியும் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அடுத்து, அக்கட்சியில் இணைந்த பிஆர்எஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மொத்தம் 7ஆக உயர்ந்துள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கட்சி வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன.
ஏறத்தாழ 7 எம்எல்ஏக்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அடுத்து அக்கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 32ஆக குறைந்தது.
இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமர், ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து! இணைந்து பணியாற்ற இரு தலைவர்களுக்கும் அழைப்பு! - Modi Wish England and iran leaders