டெல்லி : பிரபல நியூஸ் ஏஜென்சியான ஏஎன்ஐ-க்கு (ANI) பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சனாதன தர்மத்திற்கு எதிராக பேசக் கூடிய திமுகவுடன், கூட்டணி அமைத்து ஒன்றாக ஒரே மேடையில் உட்காருவதற்கான அவசியம் என்ன? என்று காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், ஒரு காலத்தில் மகாத்மா காந்தியின் பெயரை இணைத்துக் கொண்ட அதே காங்கிரசில், இந்திரா காந்தி தனது கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்த அதே காங்கிரஸ் கட்சியில், சனாதனத்துக்கு எதிராக விஷத்தை கக்குபவர்களுடன் ஒன்றாக உட்கார வேண்டிய கட்டாயம் என்ன என்று காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி கேட்க வேண்டும்? என்று தெரிவித்தார்.
தென் இந்தியாவில் ஐந்து தலைமுறைகளாக பாஜக உழைத்து வருவதாகவும், அதன் பணி தற்போது வரை தொடர்ந்து வருவதாகவும் பிரதமர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட அதிருப்தியால் மக்கள் பிராந்திய கட்சிகளுக்கு ஆதரவு அளித்ததாகவும், தற்போது அந்த கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டு உள்ள வெறுப்பு பாஜகவுக்கு சாதகமான சூழலாக மாறி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் பாஜகவின் ஆட்சியால் ஏற்படும் வளர்ச்சியை காணும் நாடு முழுவதும் வாழும் தமிழக மக்கள், தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்று, தாங்கள் வாழும் மாநிலத்தில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சிகள் குறித்து தெரிவிப்பதாகவும் அதனை மக்கள் இயல்பாகவே ஒப்பிடத் தொடங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
தான் காசி தமிழ் சங்கத்தை உருவாக்கி உள்ள அதேநேரத்தில் தமிழகத்தில் திமுகவினர் தங்களை பானிபூரி வாலாக்கள் என்று கேலி செய்தனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆனால், தமிழக மக்கள் காசி சங்கத்திற்கு வந்து காசியை பார்த்த மக்கள் வியந்து, நிறைய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதை பார்த்ததால் திமுக மீது கடும் கோபம் கொண்டு உள்ளதாகவும், அந்த கோபம் தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளதாகவும் பிரதமர் கூறி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, அண்ணாமலை நல்ல தலைவர். ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்து உள்ளார். திமுகவில் அவர் இணைந்து இருந்திருந்தால் பெரிய தலைவராக மாறி இருக்கலாம். ஆனால் பாஜக மீது கொண்ட நம்பிக்கையால் அவர் இங்கு இணைந்தார்.
பாஜக மீது கொண்டு உள்ள நம்பிக்கை காரணமாக அண்ணாமலை பாஜகவில் இணைந்து விட்டார் என்றும் மக்கள் நினைப்பார்கள் என்றும், பாஜகவின் சிறப்பம்சமே குடும்பம் சார்ந்து இயங்காமல் கட்சிக்கு உண்மையாக உழைக்கக் கூடியவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிப்பது என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் குடும்பம், குடும்பம் என்ற நோக்கத்தில் இயங்குவதால் உண்மையாக உழைக்க நினைக்கும் தொண்டர்களுக்கு பாஜகவில் உரிய இடம் கிடைப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். சனாதன தர்மம் குறித்து திமுக வெளியிட்ட கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, சனதான விவகாரத்தில் திமுகவை இல்லை காங்கிரஸ் கட்சியையே கேள்வி கேட்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் பெயரை இணைத்துக் கொண்ட காங்கிரஸ், இந்திரா காந்தி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்த காங்கிரஸ், சனாதனம் குறித்து கொடிய விஷத்தை கக்கும் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஏன் ஒரே மேடையில் உட்கார வேண்டும்? என கேள்வி எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
சனாதனம் குறித்து அவதூறு பரப்புபவர்களுடன் தேவைக்காக கூட்டணி அமைத்து காங்கிரஸ் தனது உண்மைத் தன்மையை இழந்து விட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். சனாதனம் என்பது அரசின் ஒரு அங்கம் என்றும் அது குறித்து அவதூறு பரப்பும் துணிவு இருக்கும் ஒருவருக்கு ஆதரவு அளித்து அவர்களுடன் கூட்டணி வைப்பது நாட்டுக்கு கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்றும் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க : ரூ.4,650 கோடி பணம், ரூ.2,068 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் எவ்வளவு? - Lok Sabha Election 2024