பெங்களூரு: கர்நாடகாவில் ஐபிஎஸ் பயிற்சி முடித்துவிட்டு முதல்முதலில் பணிக்கு சேர சென்றுகொண்டிருந்த நபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையில் சேர பல பேருக்கு லட்சியமாக இருந்து வருகிறது. அதிலும், காவல்துறையில் உயர் பதவிகளில் பணியாற்ற வழி வகுக்கும் ஐபிஎஸ் முடித்துவிட்டு முதல் நாள் பணியில் சேரும் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் சாதனையென்ற உணர்வை கொடுக்கும். அந்த உணர்வோடு முதல் நாள் பணியில் சேர சென்றுகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் பர்தன். இவர் கர்நாடக கேடரில் கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்துள்ளார். மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் தனது நான்கு வார பயிற்சியை முடித்த இவருக்கு ஹோலேநரசிபூரில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக போஸ்டிங் கிடைத்துள்ளது. இந்த நிலையில், இன்று முதல் நாள் பணிக்காக காத்திருந்த அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, மைசூரிலிருந்து பணியில் சேர்வதற்காக போலீஸ் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: வக்ஃப் வாரியத்தை கலைத்த ஆந்திர மாநில அரசு.. காரணம் என்ன?
ஹாசன் தாலுக்காவில் உள்ள கிட்டானே அருகே போலீஸ் வாகனத்தில் ஹர்ஷ் பர்தன் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனம் விபத்துக்குள்ளாகி பலத்த காயம் அடைந்த ஹர்ஷ் பர்தனை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதல் முயற்சியிலேயே தேர்ச்சி
இதுகுறித்து கர்நாடகா போலீசார் கூறுகையில், ஹர்ஷ் பர்தன் பயணித்த வாகனத்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் உள்ள வீடு மற்றும் மரத்தின் மீது மோதியுள்ளது. இதில், பர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரத்தில் டிரைவர் மஞ்சேகவுடா லேசான காயம் அடைந்து உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஹர்ஷ் பர்தனின் குடும்பம் மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள ஹர்ஷ் பர்தன் 2022-23 பேட்ச்சில் ஐபிஎஸ் முடித்துள்ளார். மேலும், ஹர்ஷ் பர்தன் யுபிஎஸ்சி தேர்வில் 153வது ரேங்க் பெற்று முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு ஐபிஎஸ் முடித்துவிட்டு, கடந்த வாரம் பயிற்சி பெற்று, உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேரவிருந்த அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கர்நாடகா காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.