உத்திரபிரதேசம்: உத்திரபிரதேச மாநிலம், பாண்டா சிறைச்சாலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் முக்தார் அன்சாரி கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) அதிகாலை வயிற்று வலி காரணமாக, பாண்டா சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு பாண்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்தார் அன்சாரியின் குடும்பத்தினர் காவல்துறையிடம் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அன்சாரி பாண்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வேறு மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 28) பாண்டா மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி, "மார்ச் 19ஆம் தேதி அன்று இரவு உணவில், எனது தந்தைக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை. இதுகுறித்த நியம் கிடைக்க நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வோம், அதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படும் முக்தார் அன்சாரி, தனது குடும்ப உறுப்பினர்களுடனான கடைசி தொலைப்பேசி அழைப்பில், மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக விஷம் கொடுக்கப்பட்டு, தான் இறந்து வருவதாகப் பலவீனமான குரலில் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாது, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பலர் தனக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக, முக்தார் அன்சாரி, குற்றம் சாட்டிய மனு ஒன்றின் புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த மனுவில், சிறை நிர்வாகம் தன்னது உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்ததாகவும், லெப்டினன்ட் கவர்னர் மற்றும் பாஜக எம்எல்சி பிரிஜேஷ் சிங், பாஜக எம்எல்ஏ சுசீல் சிங், முன்னாள் ஐஜிஎஸ்டிஎஃப் அமிதாப் யாஷ் மற்றும் உத்திரபிரதேச உள்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்ட பலர் தன்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில், முக்தார் அன்சாரியால் கொல்லப்பட்ட மறைந்த பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராயின் மனைவி அல்கா ராய், வாரணாசி இன்று (மார்ச் 29) செய்தியாளர்களிடம் கூறியபோது, "குண்டர் கும்பலாக மாறிய அரசியல்வாதியின் மரணத்தில் நீதி கிடைத்துள்ளது. இது எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம். நீதிக்கான எனது நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இறுதியாக, எனது ஹோலி இப்போது தொடங்குகிறது. எனது கணவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் ஹோலி கொண்டாடியதில்லை. ஆனால் இன்று எங்களுக்கு ஹோலி என்று உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இதுகுறித்து தனது 'X' வலைதளப் பக்கத்தில், "முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால், அவரது மரணம் தொடர்பான உண்மைகள் வெளிவர உயர்மட்ட விசாரணை தேவை. மேலும், அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை இயற்கை வழங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, முக்தார் அன்சாரியின் மரணம் குறித்து 3 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தவுள்ளது என்று பண்டா தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் என்றும், மேலும், இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு, முக்தார் அன்சாரியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் என்றும், அந்த பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், "முக்தார் அன்சாரியை பாதுகாக்க முலாயம் சிங் அரசு முயற்சித்தாகவும், இதற்காக உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும்" முன்னாள் டிஎஸ்பி சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், "முக்தார் அன்சாரிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு நிலைமை முற்றிலும் தெளிவாகிவிடும். அதுமட்டும் அல்லாது, முக்தார் அன்சாரி ஒரு குற்றவாளி, டான், மாஃபியா ஆகவே அவருடைய மரணம் பற்றி பெரிதாக நினைக்கக் கூடாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தாதா - அரசியல்வாதி - சிறைவாசி.. யார் இந்த முக்தார் அன்சாரி?