உத்தரபிரதேசம்: பிரயாக்ராஜ், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள 'வியாஸ் கா தெஹ்கானா' பகுதியில் இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்யலாம் என்ற வாரணாசி மாவட்ட நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அலகாபாத் நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்க விசாரித்த நீதிபதி, "வழக்கின் முழுப் பதிவுகளையும் ஆராய்ந்து, பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், கடந்த ஜனவரி 17ஆம் தேதி மாவட்ட நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும், வாரணாசி மாவட்ட நீதிபதியைச் சொத்தைப் பெறுபவராக நியமித்தும், ஜனவரி 31ஆம் தேதியில் உத்தரவிட்டதன்படி தெஹ்கானாவில் பூஜை தொடரும் எனவும் உத்தரவிட்டார்.
அதாவது, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும், அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டி மசூதியில் பிரார்த்தனை செய்வது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், "கடந்த ஜனவரி 17 மற்றும் 31ஆம் தேதிகளில் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து, அஞ்சுமன் இண்டெஜாமியா தாக்கல் செய்த முதல் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும், ஞானவாபி வளாகத்தில் பூஜை தொடரும் எனவும் அலகாபாத் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஒருவேளை அஞ்சுமன் இண்டெஜாமியா உச்சநீதிமன்றம் வந்தால், அதற்கு முன் எச்சரிக்கையாக நாங்கள் மனுத்தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்தார்.
வழக்கறிஞர் பிரபாஷ் பாண்டே கூறுகையில், "மாவட்ட நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முஸ்லீம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அங்குப் பூஜைகள் வழக்கம்போல் தொடரும். இது சனாதன தர்மத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி. அவர்கள் தரப்பில் (முஸ்லீம்) முடிவை மறுபரிசீலனை செய்யலாம். ஆனால் பூஜை தொடர்ந்து நடக்கும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, உத்தரபிரதேசம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே, அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஞானவாபி கட்டிய ஞானவாபி மசூதி உள்ளது. ஆனால், அங்கு இந்து சிலை இருப்பதாகவும், முன்னதாக இருந்த இந்து கோயிலை இடித்தே இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி இந்துக்கள் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஞானவாபி மசூதியில் தடை செய்யப்பட்ட பகுதியான வியாஸ் கா தெகானாவில் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும், ஆகையால் அதனை வழிபட அனுமதி வழங்க வேண்டும் எனவும் இந்து பெண்கள் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் நடத்திய ஆய்வில் சிலை இருப்பது உறுதியானது.
பின்னர், இந்த வழக்கை விசாரணை செய்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், மசூதிக்குள் தடை செய்யப்பட்ட பகுதியான வியாஸ் கா தெகானாவில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யவும், பூஜை செய்யவும் அனுமதி அளித்தது. இதனிடையே, வாரணாசி மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் குழு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஞானவாபியில் உள்ள தெற்கு பாதாள அறையில் உள்ள சிலைகளுக்குப் பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் வளாகத்தில் இந்து பூஜைகளைச் செய்யப்பட்டு, பக்தர்களுக்காகத் தெற்கு பாதாள அறை திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.