டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு 2018 - 2019ஆம் ஆண்டுக்கான வருமான வரி செலுத்த 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால், அக்கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சிகளை முடக்க பாஜக அரசு பல்வேறு வழிகளில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தற்போது 2017 - 2018ஆம் ஆண்டு முதல் 2020 - 2021ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு முறையாக தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை இன்று (மார்ச் 29) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நாளை (மார்ச் 30) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பழைய பான் கார்டு பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி வரிப்பாக்கிச் செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திரிணாமுல் காங்கிரசுக்கு கடந்த 72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ் வருமான வரித்துறையால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகாய் தனது X வலைத்தளப் பதிவில், கடந்த 72 மணி நேரத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு உரிய மொத்தம் 11 வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “மோடி அரசு தேர்தலை சுதந்திரமாகவும். நேர்மையாகவும் நடத்த மறுப்பது வேடிக்கையாக உள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தோடு பாஜக அரசு செயல்படுகிறது. மேலும் அமலாக்கத்துறை செயல்படாத நேரத்தில் வருமான வரித்துறையை வைத்து பல்வேறு இடையூறுகளை எதிர்கட்சிக்கு அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Lok Sabha Election 2024: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - CPI M Candidates List